இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் கண்மாயில் மீன் பிடிக்க குவிந்த மக்கள்


இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் கண்மாயில் மீன் பிடிக்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 9 April 2020 5:30 PM IST (Updated: 9 April 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் கண்மாயில் மீன் பிடிக்க மக்கள் குவிந்தனர்.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தேனியில் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த 5-ந்தேதியில் இருந்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. இதனால், அசைவ பிரியர்கள் இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கண்மாய் மற்றும் ஆறுகளில் மீன் பிடிப்பதில் மக்களிடம் ஆர்வம் அதிகரித்து உள்ளது. முல்லைப்பெரியாற்றில் பல இடங்களில் தூண்டில் போட்டும், வலை வீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.

தேனி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயில் நேற்று மீன் பிடிக்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தூண்டில் போட்டும், வலைவீசியும் மீன் பிடித்தனர். ஆங்காங்கே கரையில் நின்று கொண்டும், தண்ணீருக்குள் இறங்கியும் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜிலேபி, கட்லா, ரோகு, ‘கோல்டுபிஷ்’ போன்ற மீன்கள் தூண்டில்களில் சிக்கின. காலையில் மீன் பிடிக்க வந்த சிலர் மாலை வரை மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சிலர் வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து கண்மாய் கரையில் சாப்பிட்டபடி மீன்பிடிக்கும் பணியை தொடர்ந்தனர். சிலர் கண்மாய் பகுதிக்கு வந்து மீன்களை விலைபேசி வாங்கிச் சென்றனர். சிலர் தாங்கள் பிடித்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டனர்.


Next Story