கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை - வாகனங்கள் நடுவழியில் நிறுத்தம்
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
கொடைக்கானல்,
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக, ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. குளு, குளு சீசனுக்கு சொந்தமான கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் கொடைக்கானல் நகரில் இருந்து மேல்மலை செல்லும் மலைப்பாதையில், கூக்கால் பிரிவு பகுதி முதல் இரட்டை போஸ்ட் என்ற இடம் வரை நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. வானத்தில் இருந்து செங்கற்களை தூக்கி வீசுவது போல பெரிய அளவிலான ஆலங்கட்டிகள் மலைப்பாதையில் விழுந்தன. இதன் காரணமாக மலைப்பாதை முழுவதும் ஆலங்கட்டிகளாக காட்சியளித்தது.
கொடைக்கானல் மலைப்பாதை, பனிமலை போன்ற தோற்றத்தில் இருந்தது. இதனை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். அங்கு சென்ற சிலர், தங்களது கைகளில் ஆலங்கட்டிகளை எடுத்து பார்த்து ரசித்தனர். சிலர் ‘செல்பி‘ எடுத்து மகிழ்ந்தனர். மேலும் மலைப்பாதை முழுவதும் ஆலங்கட்டிகள் நிறைந்து இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக, அந்த வழியாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தங்களது வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களது வாழ்நாளிலே பார்க்க முடியாத அளவுக்கு நேற்று பகல் 2 மணி அளவில் கூக்கால் பிரிவு பகுதிகளில் மிகப்பெரிய ஆலங்கட்டி மழை பெய்தது. மழை விட்ட பின்னரும் மலைப்பாதையில் ஆலங்கட்டிகள் குவிந்து கிடந்ததால் வாகனங்களை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சுமார் ஒரு மணிநேரம் கழித்து ஆலங்கட்டிகள் கரைந்த பின்னர்தான் வாகனங்கள் இயக்கப்பட்டது என்றனர்.
இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள பாச்சலூர், சோலியபாறை, நடனங்கால்வாய் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் சுமார் 2½ மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த ஆலங்கட்டிகள் பெரிய கற்கள் போன்று இருந்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்கள் சேதமடைந்தன.
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவு ஆலங்கட்டி மழை பெய்ததன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. அதேநேரத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
Related Tags :
Next Story