ராசிபுரம், வினைதீர்த்தபுரத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகள் - கலெக்டர் மெகராஜ் ஆய்வு


ராசிபுரம், வினைதீர்த்தபுரத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகள் - கலெக்டர் மெகராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 9 April 2020 6:05 PM IST (Updated: 9 April 2020 6:05 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் மற்றும் வினைதீர்த்தபுரத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கும் பணியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் வசிப்பிடங்களை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் அப்பகுதியை சுற்றிலும் 5 கி.மீட்டர் அளவிற்கு வீடு, வீடாக சென்று யாருக்கேனும் சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றார்கள்.

நோய் தொற்று அறிகுறிகள் தென்படுபவர்களை தனிமைப்படுத்துவதற்காக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு பெண்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில் 100 நபர்கள் தங்கும் வகையில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியை கலெக்டர் மெகராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் புதன்சந்தை பகுதியில் 30 படுக்கைகள் கொண்ட வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் காணப்படுபவர்களுக்கான தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், சிறப்பு மருத்துவர் கவின்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story