கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கொரோனாவிற்காக 6 சிறப்பு “108 ஆம்புலன்ஸ்” வாகனங்கள் ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கொரோனாவிற்காக 6 சிறப்பு “108” ஆம்புலன்ஸ்” வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி ராமன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு என தலா 3 சிறப்பு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொரோனா அறிகுறி யாருக்கும் இருந்தால் அவர்களை அழைத்து வருதல் உள்ளிட்ட பணிகளை மட்டும் மேற்கொள்வார்கள். பிற நோயாளிகள் யாரும் அதில் ஏற்றப்பட மாட்டார்கள். கொரோனா நோயாளிகளை அழைத்து வருவதற்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அணியும் முக கவசம், கையுறை, கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் மொத்தம் 22 இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பச்சிளம் குழந்தைகளுக்காக மட்டும் 2 ஆம்புலன்சுகளும், ஒரு அவசர இருசக்கர வாகனமும் இயங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர கால கட்டத்திற்காக மட்டும் 108 ஆம்புலன்சுகள் இயங்கி வருகின்றன. அதில் பச்சிளம் குழந்தைகளுக்காக மட்டும் 2 வாகனங்கள் இயங்குகின்றன.
தற்போது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். பொதுமக்கள் விபத்து, பிரசவம், என எந்த அவசரத்திற்கும் 108 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story