நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் உள்பட புதிதாக 22 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் உள்பட புதிதாக 22 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2020 4:45 AM IST (Updated: 10 April 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக தனியார் ஆஸ்பத்திரி இன்னொரு பெண் ஊழியர் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.

நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 பேர் ஏற்கனவே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட 16 பேரையும் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தொடங்கி உள்ளனர். இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நெல்லைக்கு வந்திருந்த ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் முதன்முதலாக கொரோனா பாதிப்பு நோயாளியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் ஒருவருக்கு பாதிப்பு

இதேபோல் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடியில்...

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக் கப்பட்டு உள்ளனர். இதில் 13 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 4 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த 17 பேருடன் நெருங்கி பழகியவர்கள் விவரத்தை சேகரித்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி 28 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருந்தது. அதில் சிலரது ரத்த பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இன்னொரு பெண் ஊழியர்

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர், அவருடைய கணவர், மாமியார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 16 பேரும், அந்த பெண் ஊழியரின் வீட்டின் மாடியில் வசித்து வந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் வீட்டின் மாடியில் வசித்து வந்த 3 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரியின் இன்னொரு பெண் ஊழியர் ஒருவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அய்யனாரூத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது.

இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டருக்கும் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் டாக்டருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்து உள்ளது. இது 3 மாவட்ட மக்களிடையே பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story