கும்மிடிப்பூண்டி அருகே, மின்னல் தாக்கி 2 பேர் பலி


கும்மிடிப்பூண்டி அருகே, மின்னல் தாக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 April 2020 11:00 PM GMT (Updated: 9 April 2020 9:51 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுகும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், எளாவூர், கவரைப்பேட்டை, ஈகுவார்பாளையம், பாதிரிவேடு, மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது வானம் இருண்டு மதிய வேளையானது இரவு போல காட்சியளித்தது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி விஜயன் (வயது 42) நேற்று அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான விஜயனுக்கு லட்சுமி(35) என்ற மனைவியும், வனிதா(15) என்ற மகளும், பரத்(12) என்ற மகனும் உள்ளனர்.

அதே போல மாதர்பாக்கம் இருளர் காலனியைச் சேர்ந்த நாகராஜூம்(55), அவருடைய மனைவி புஜ்ஜியம்மாவும் (49) செதில்பாக்கம் அருகே உள்ள புதுகண்டிகை ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடியுடன் வானத்தில் மின்னல் பளச்சிட்டது. இந்த அதிர்ச்சியால் புஜ்ஜியம்மா உயிரிழந்தார். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலில் காயம் ஏதும் இல்லை. உடன் இருந்த அவரது கணவருக்கும் எதுவும் ஆகாததால் அவர் மின்னல் தாக்கி இறந்தாரா? அல்லது அதிர்ச்சியில் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல் பாஞ்சாலி ஊராட்சிக்கு உட்பட்ட கீமலூர் கிராமத்தில் கோவிந்தய்யா(65) மின்னல் தாக்கி காயம் அடைந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் குமார், துணை தாசில்தார் ராஜேஷ் குமார், வட்ட வழங்கல் அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

இதுதவிர கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் அருகே உள்ள சூரப்பூண்டியில் வசித்து வரும் வசந்தா(38) என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் அந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது மின்னல் தாக்கி பழுதானது. பலத்த காற்றின் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் மின் கம்பிகள் அறுந்ததால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் மின்தடை நீடித்தது.

Next Story