திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் மனிதநேயம்: சர்க்கஸ் கலைஞர்கள், விலங்குகளுக்கு உணவு வழங்கிய போலீசார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள், விலங்குகளுக்கு போலீசார் உணவு வழங்கி தங்களது மனித நேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போலீசார், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கும், விலங்களுக்கும் உணவுகளை வழங்கி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சர்க்கஸ் கூடாரம் அமைத்து இருந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்க்கஸ் கூடாரம் மூடப்பட்டது. வருமானம் இல்லாததால் அந்த சர்க்கஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அந்த சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த 2 ஒட்டகங்கள் மற்றும் 2 குதிரைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்தனர்.
இதையறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் நேற்று ஈக்காட்டில் உள்ள சர்க்கஸ் கூடாரத்துக்கு சென்று அங்கிருந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கும், ஒட்டகங் கள் மற்றும் குதிரைகளுக்கும் உணவு வழங்கினர்.
ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சர்க்கஸ் கலைஞர்களுக்கும், விலங்குகளுக்கும் தொடர்ந்து உணவு வழங்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
ஊரடங்கு உத்தரவால் ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு உள்ளன. ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆந்திராவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டு இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. இதனால் ஓட்டல்கள், இறைச்சி கடைகளிலிருந்து வீசப்படும் கழிவுகள் தின்றுவிட்டு உலா வந்த 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தற்போது உணவின்றி அவதிப்பட்டு வந்தன.
இதையடுத்து போலீஸ் ஏட்டு ரமேஷ், இவ்வாறு உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு கடந்த 22-ந்தேதி முதல் பிஸ்கட், பிரட் மற்றும் தனது வீட்டில் இருந்து தயார் செய்து எடுத்து வரும் உணவை வழங்கி வருகிறார். போலீஸ் ஏட்டுவின் இந்த மனிதநேயத்தை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
அதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் ஊராட்சியில் ஏழைகள், கூலி தொழிலாளிகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் உணவின்றி அவதிப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் நேற்று 500 ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினர். ஊராட்சிமன்ற தலைவி பரமேஸ்வரி பொன்னுசாமி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story