மங்கலம் பகுதி கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு - பிரதான சாலைகளுக்கும் ‘சீல்’
மங்கலம் பகுதி கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மங்கலம்,
மங்கலம் பகுதியை சேர்ந்த 6 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் மங்கலம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கொரோனா பாதித்தவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 6 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு மண்டலத்தை 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளனர்.மேலும் மங்கலம் நால்ரோடு பகுதியில் செல்லும் சாலைகளான பல்லடம்ரோடு, அவினாசி ரோடு, சோமனூர் ரோடு, திருப்பூர் ரோடு ஆகிய சாலைகளுக்கு சீல் வைத்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் வசித்த வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த தெருக்களில் வசித்தவர்கள் மற்ற பகுதிகளுக்கு செல்லாத வகையிலும், மற்ற தெருக்களில் வசிப்பவர்கள் சீல் வைக்கப்பட்ட தெருக்களுக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர்( பொறுப்பு) மு.கார்த்திகேசன் தலைமையில் 5 வீரர்களும் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர், மங்கலம் பகுதியை வருவாய்த்துறையினர் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவித்ததை தொடர்ந்து இடுவாய் ஊராட்சியில் இருந்து மங்கலம் ஊராட்சிக்கு செல்லும் பிரதான சாலையான ஆட்டையம்பாளையம் பிரிவு மற்றும் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட எல்லைகளை கொரோனா தடுப்பு ,பாதுகாப்பு நடவடிக்கையாக இடுவாய் பொதுமக்கள் சீல் வைத்துள்ளனர்.மேலும் இதே போல இச்சிப்பட்டி ஊராட்சியில் இருந்து மங்கலம் செல்லும் சாலையான பெத்தாமூச்சிப்பாளையம் சாலையை இச்சிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் இருந்து மங்கலம் செல்லும் சாலையை பொதுமக்கள் சீல் வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story