விருதுநகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரின் காரை திருடி விற்ற 2 பேர் கைது; வாங்கியவரும் சிக்கினார்


விருதுநகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரின் காரை திருடி விற்ற 2 பேர் கைது; வாங்கியவரும் சிக்கினார்
x
தினத்தந்தி 10 April 2020 5:00 AM IST (Updated: 10 April 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் டிராவல்ஸ் அதிபரின் காரை திருடி விற்ற நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு காரை வாங்கிய மதுரையை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், 

விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா. டிராவல்ஸ் அதிபர். இவரது கார் கடந்த 31-1-2020 அன்று திருடு போனது. இதுகுறித்து அவர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

முரளிகிருஷ்ணா வீட்டின் அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா தொடங்கி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் நோக்கி கார் சென்றிருப்பது தெரியவந்தது. அதனால் சுமார் 200 கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கார் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் காரை நாகர்கோவிலை சேர்ந்த ஆஸ்டின் இன்பராஜ்(வயது40), சுரேஷ்குமார்(36) ஆகியோர் திருடியிருப்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் காரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் திருட்டு காரை மதுரையை சேர்ந்த ராஜேந்திரன்(54) என்பவரிடம் விற்று இருப்பது தெரியவந்தது. மேலும் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இவர்கள் வேனை திருடி விற்று இருப்பதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து கார் திருடர்கள் 2 பேரும் திருட்டு காரை வாங்கிய ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார்கள். மேலும் கார், வேன் மீட்கப்பட்டது.

ஆஸ்டின் இன்பராஜும், சுரேஷ்குமாரும் கூட்டாக பழைய கார்களை வாங்கி அதனை பிரித்து விற்று தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பல பகுதிகளுக்கு சென்று கார்களை திருடி அதற்கு பழைய கார்களின் ஆர்.சி.புத்தகத்தை திருத்தி விற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் மேலும் எங்கெங்கு திருடியுள்ளனர் என்று விசாரணை நடந்து வருகிறது.

Next Story