ஊரடங்கால் குடும்பத்தினர் வரமுடியவில்லை இந்து முதியவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள் - பாந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்
ஊரடங்கால் குடும்பத்தினர் வரமுடியாத நிலையில் இந்துமுதியவரின் உடலை இஸ்லாமியர்கள் தூக்கி சென்று தகனம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் பாந்திராவில் நடந்து உள்ளது.
மும்பை,
மும்பை பாந்திரா கரீம்நகரை சேர்ந்தவர் முதியவர் பிரேம் சந்திரா (வயது68). இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரேம் சந்திரா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பிரேம் சந்திராவின் மகன் மோகன் ராஜஸ்தானில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களால் வரமுடியவில்லை. இதையடுத்து பிரேம் சந்திரா உடலுக்கு அவரது பக்கத்து வீடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்தனர். பின்னர் உடலை தோளில் சுமந்து சென்று தகனம் செய்தனர்.
இதுகுறித்து பிரேம் சந்திராவின் மகன் மோகன் கூறுகையில் ‘‘நாலாச்சோப்ராவில் வசிக்கும் எனது 2 அண்ணன்களை தொடர்பு கொள்ள கூட முடியவில்லை. ராஜஸ்தானில் உள்ள எனது சித்தப்பாக்களுக்கு தகவல் கொடுத்தேன். அவர்களால் வரமுடியவில்லை. இந்தநிலையில் பக்கத்து வீடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் எனது தந்தையின் இறுதிசடங்குக்கு உதவி செய்ய முன்வந்தனர். இறப்பு சான்றிதழ் வாங்கவும், தகன மையத்துக்கு உடலை தூக்கி வந்தும் அவர்கள் உதவினார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உதவி செய்தற்காக அவர்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன்’’ என்றார்.
முதியவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட யூசுப் சேக் கூறுகையில், ‘‘பிரேம் சந்திராவை எனக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற நேரங்களில், மதங்களை தாண்டி மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story