கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க பரிந்துரை - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க பரிந்துரை செய்யமந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் கூட்டணி அரசு பதவி ஏற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக பதவி ஏற்றார். உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ இல்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164(4) விதியின்படி அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக தேர்வாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உத்தவ் தாக்கரே இருந்தார்.இதற்காக வருகிற 24- ந் தேதி 9 எம்.எல்.சி. பதவிகளுக்காக நடைபெற இருந்த தேர்தலில் எம்.எல்.சி.யாக தேர்வாகி தனது முதல்-மந்திரி பதவியை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்சமயம் நடைபெற இருந்த அனைத்து தேர்தல்களும் தள்ளி வைக்கப்பட்டன.
இதனால் உத்தவ்தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்வாரா? என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி.க்களாக இருந்த 2 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அக்கட்சியில் இருந்து வெளியேறியதன் காரணமாக தற்போது கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் 2 எம்.எல்.சி. பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.
இதற்கு மத்தியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையில் மாநில மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை ஏற்று கவர்னர் நியமனம் செய்தால், உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றிக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story