வாணியம்பாடியில், தனிமைப்படுத்தப்பட்ட 51 பேர் வீடு திரும்பினர் - அமைச்சர் நிலோபர்கபில் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்தார்
வாணியம்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட 51 பேர் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். அமைச்சர் நிலோபர்கபில் பூங்கொத்து கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார்.
வாணியம்பாடி,
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய 8 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேர் வீடு அமைந்துள்ள தெருக்கள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
மேலும் டெல்லி சென்று திரும்பிய 8 பேரின் குடும்பத்தை சேர்ந்த 51 பேர், வாணியம்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியிலும், தனியார் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஒரு வாரமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இவர்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் இவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பவதாக கலெக்டர் சிவன்அருள் அறிவித்தார். அதன்படி நேற்று பகல் 12 மணியளவில் தாழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபில், 51 பேரையும் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்று பூங்கொத்து கொடுத்து வேன் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைத்தார். மன உறுதியுடன் இருக்குமாறும் ஊக்கப்படுத்தினார். அனைவரும் முக கவசம் அணிந்தவாறு வீடு திரும்பினர்.
அப்போது வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், துணை போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன், நகர செயலாளர் சதாசிவம், அவை தலைவர் சுபான், கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் காசிப், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வக்கீல்அகமது, கிராம நிர்வாக அலுவலர்கள் சற்குணகுமார், சீனிவாசன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story