கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஆதரவற்றோரை அரவணைத்த அதிகாரிகள் - முடிவெட்டி, குளிக்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர்
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க தஞ்சை நகரில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோரை மீட்டு அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு முடிவெட்டி, குளிக்க வைத்து உணவும் வழங்கி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
தஞ்சை ரெயிலடி, காந்திஜி சாலை, சோழன் சிலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் சாலையோரம் வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் எந்தவித பாதுகாப்போ, சமூக இடைவெளியோ இல்லாமல் வாழ்ந்து வந்ததுடன், உணவின்றியும் தவித்து வந்தனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக பாதுகாப்பான தங்குமிடம், உணவு வழங்க மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாநகராட்சி ஏற்பாடு செய்தது.
இதனைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆதரவற்றோர் 89 பேரை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் மீட்டு வாகனங்களில் ஏற்றி தஞ்சை சரபோஜி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர். கடந்த 7-ந் தேதி முதல் இவர்கள் அனைவரும் அங்கு வைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் நேற்று முடிவெட்டப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் குளிக்க வைக்கப்பட்டனர். போலீசார் சார்பில் அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் உணவு, தேனீர் போன்றவை வழங்கப்பட்டன. இவர்கள் அனைவருக்கும் புதிய பாய் வழங்கப்பட்டு 1 மீட்டர் இடைவெளியில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கு டாக்டர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகளும் அவ்வப்போது அங்கு சென்று இந்த பணியினை கண்காணித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
Related Tags :
Next Story