தஞ்சை அருகே பயங்கரம்: வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை உயிரோடு எரித்த மாமியார் கைது - தாய்-குழந்தைக்கு தீவிர சிகிச்சை


தஞ்சை அருகே பயங்கரம்: வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை உயிரோடு எரித்த மாமியார் கைது - தாய்-குழந்தைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 April 2020 8:18 AM IST (Updated: 10 April 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வரதட்சணை கேட்டு நிறைமாத கர்ப்பிணியை உயிரோடு எரித்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவருடைய குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் 2-வது மகள் சங்கீதா(வயது 20). இவருக்கும், சூரியம்பட்டியை சேர்ந்த ராமையன் மகன் முருகானந்தத்திற்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில நாட்களிலேயே மாமியார் புஷ்பவள்ளி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சங்கீதாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த சங்கீதா, அனைத்து கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு தனக்கு நடந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துள்ளார். இது தொடர்பாக முருகானந்தமும் எதையும் கேட்காமல் இருந்துள்ளார்.

கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவை மாமியார் புஷ்பவள்ளி, நீயும் உனது வாரிசும் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என தொடர்ந்து அவரை சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் 5-வது மாதம் சங்கீதாவிற்கு வளைகாப்பு நடந்தது. அப்போதும் சங்கீதாவை, புஷ்பள்ளி தாக்கி உள்ளார். முருகானந்தத்தின் தம்பியும் சங்கீதாவை தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவை கடந்த 4-ந் தேதி, நீயும் உன் வாரிசும் உயிரோடு இருக்கக் கூடாது என கூறிய புஷ்பவள்ளி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சங்கீதாவின் வயிற்றுப்பகுதியில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் அலறி துடித்த சங்கீதாவை அவரது கணவரும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீக்காயத்துடன் இருந்த சங்கீதாவிற்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பவள்ளியை கைதுசெய்தனர்.

இந்த நிலையில் சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. அதில், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு யார் காரணம்? தன்னை தாக்கியவர்கள் யார்? என சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது குழந்தையை கணவரிடமோ, மாமியாரிடமோ கொடுக்க வேண்டாம். தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இந்த வாக்குமூலத்தை புகாராக எடுத்துக்கொள்ளுமாறும், இது குறித்து தனது சகோதரி போலீசில் புகார் அளிப்பார் என்றும் அவர் அதில் கூறி உள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story