அரக்கோணத்தில், துப்புரவு தொழிலாளியை தாக்கிய போலீஸ் - வேலை நிறுத்தத்தால் பரபரப்பு


அரக்கோணத்தில், துப்புரவு தொழிலாளியை தாக்கிய போலீஸ் - வேலை நிறுத்தத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 April 2020 3:45 AM IST (Updated: 10 April 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் வேலைக்கு சென்ற துப்புரவு தொழிலாளியை போலீஸ் தாக்கியதால் மற்றதொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 53) என்பவர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலைபர்த்து வருகிறார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் காந்திசாலை வழியாக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சேகரை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதற்கு சேகர், நான் நகராட்சி துப்புரவு பணியாளர், வேலைக்கு செல்லும் என்னை ஏன் தேவையில்லாமல் தாக்கினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் சரியான பதில் கூற வில்லையாம்.

இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற துப்புரவு தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜா விஜய காமராஜ், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்தை சந்தித்து இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். துப்புரவு தொழிலாளி தாக்கப்பட்டது குறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர்களிடம் ஆணையாளர் உறுதி அளித்தார். அதன் பின்னர் தொழிலாளர்கள் சமாதானம் அடைந்து பணிக்கு சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story