வனப்பகுதியில் கீழே கிடந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்தபோது தோட்டா பாய்ந்து வாலிபர் காயம் - மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை
மாரண்டஅள்ளி அருகே வனப்பகுதியில் கீழே கிடந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்த போது தோட்டா பாய்ந்து வாலிபர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 21). தொழிலாளியான இவர் வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தபோது காயம் ஏற்பட்டதாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருடைய தோள்பட்டையில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாமிதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சாமிதுரையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த 1-ந்தேதி சாமிதுரை தனது தாத்தா ராஜூவுடன் மாரண்டஅள்ளி அருகே வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பாறை இடுக்கில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கீழே கிடந்து உள்ளது.
அந்த துப்பாக்கியை எடுத்து பார்த்தபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது. அப்போது அதில் இருந்து வெளியான தோட்டா சாமிதுரையின் தோள்பட்டையில் பாய்ந்துள்ளது. இதில் காயம் அடைந்த அவர் போலீசாருக்கு இதுபற்றி தெரிந்தால் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டி வரும் என நினைத்து ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வலி அதிகரித்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக சீரியனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பிரசாந்த் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாமிதுரையின் தாத்தா ராஜூ உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story