கொடைக்கானலில் ஆளில்லாத கடையில் ‘பிரட்’ விற்பனை - பொதுமக்களிடம் வரவேற்பு
கொடைக்கானலில் ஆளில்லாத கடையில் செய்யப்படும் ‘பிரட்’ விற்பனைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
கொடைக்கானல்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். அவ்வாறு பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து காய்கறி, மளிகை கடைகளில் சமூக இடைவெளிவிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ‘பிரட்’டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து அங்குள்ள ஹில்டாப் குரூப் நிறுவனங்களின் சார்பில் 7 ரோடு சந்திப்பு அருகே ஆளில்லாத கடையில் ‘பிரட்’ விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி அந்த நிர்வாகத்தினர், பொதுமக்களுக்கு ‘பிரட்’ கிடைப்பதற்காக தங்களது கடை முன்பு மேஜை ஒன்றில் ‘பிரட்’ பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் விற்பனை செய்ய ஆட்கள் யாரும் இல்லை. அதற்கு பதில் ‘பிரட்’ வைத்துள்ள பெட்டியின் அருகில் ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், இங்கு வைக் கப்பட்டு இருக்கும் ‘பிரட்’ பாக்கெட்டின் விலை ரூ.40 ஆகும். தேவையான அளவுக்கு ‘பிரட்’டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த கடைக்கு வந்து ‘பிரட்’டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், இவ்வாறு பொருட்கள் வாங்குவதால் சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக உள்ளது என்று தெரிவித்தனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ‘பிரட்’ தடையின்றி கிடைக்க இதுபோன்ற ஏற்பாடுகளை செய்து உள்ளோம் என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story