ஊரடங்கை மீறி சுற்றுவதை தடுக்க வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்த சேலம் போலீசார்
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சுற்றுவதை தடுக்க வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்து புதிய கட்டுப்பாட்டை சேலம் மாநகர போலீசார் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
சேலம்,
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறிக்கொண்டு பெரும்பாலானோர் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள், கார்களில் வெளியே சுற்றித்திரிவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சேலம் மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே சென்று, தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி சேலம் 5 ரோடு பகுதியில் நேற்று காலை போலீஸ் துணை கமிஷனர் செந்தில் மற்றும் உதவி கமிஷனர் பூபதிராஜன் ஆகியோர் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்த மொபட், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை நிறுத்தி விசாரித்தனர். அதில், சிலர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
இதனை தொடர்ந்து தேவையில்லாமல் வாகனங்களில் செல்பவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களது வாகனங்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் செந்தில், மஞ்சள் நிற பெயிண்ட் அடித்தார். பின்னர் அந்த வழியாக சென்ற மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கும் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவை மீறி தினமும் ஏராளமானோர் தங்களது இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்று வருகிறார்கள். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஊரடங்கை மீறி வெளியே திரியும் வாகனங்களுக்கு நம்பர் பிளேட் அருகில் கலர் பெயிண்ட் அடிக்கப்படும். குறிப்பிட்ட அந்த பெயிண்ட் அடிக்கப்பட்ட வாகனங்கள் 4 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது.
மஞ்சள், சிவப்பு என ஒவ்வொரு நாளுக்கு ஒரு நிறம் வீதம் மொத்தம் 4 நாட்களுக்கு பெயிண்ட் அடிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட வாகனம் 4 நாட்களுக்கு பிறகு தான் வெளியே வர வேண்டும். அதையும் மீறி வந்தால் இனிமேல் அந்த வாகனத்தை இயக்க முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக சேலம் மாநகரில் இதுவரை 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில் மொபட், மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ என மொத்தம் 535 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story