தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி ஊழியருடன் பழகியவர்கள் விவரம் சேகரிப்பு
தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி ஊழியருடன் பழகியவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பெரும்பாலான மக்கள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று தற்காலிக மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் மக்கள் வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சாலைகள், கடைகள், மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தனியார் ஆஸ்பத்திரி
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வீடுகள் அமைந்து உள்ள போல்டன்புரம் உள்ளிட்ட 8 பகுதிகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு அனைத்து சாலைகளும் தகரங்களால் அடைக்கப்பட்டு உள்ளன. ஒரு வழியில் மட்டும் சுகாதாரத்துறையினர், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்த பெண் ஊழியருடன் நெருங்கி பழகிய மற்ற ஊழியர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த மற்றொரு பெண் ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
விவரம் சேகரிப்பு
இதனால் அந்த பெண் ஊழியருடன் பழகியவர்கள், வேனில் ஊருக்கு சென்ற மற்ற ஊழியர்கள் விவரங்களையும், தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்ட நோயாளிகள் விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அந்த விவரங்களை சேகரித்து அவர்களை முழுமையாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
தங்கம்மாள்புரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்துறையினர் அந்த பகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று, யாருக்கும் சளி, காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யும் பணிகளையும் தொடங்கி உள்ளனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story