கொரோனா அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தி வாழும் காணி இன மக்கள் - அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வருவது இல்லை
கொரோனா அச்சுறுத்தலால் காணி இன மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தி வாழ்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அதாவது அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலையில், தாமிரபரணி ஆற்றின் பிரதான அணையான பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு அணைக்கு அருகிலும், அணைக்கு உள்ளே வனப்பகுதியிலும் இயற்கையோடு, இயற்கையாக காணி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள அகஸ்தியர் நகர், சின்னமயிலாறு காணி குடியிருப்பு, பெரிய மயிலாறு காணி குடியிருப்பு, இஞ்சி குழி, சேர்வலாறு காணி குடியிருப்பு ஆகிய இடங்களில் குடிசை அமைத்தும், வீடு கட்டியும் வசித்து வருகிறார்கள். இங்கு 153 வீடுகளில் மொத்தம் 450 பேர் வசிக்கின்றனர்.
இவர்கள் சூரிய ஒளி மின்சாரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் நடந்து செல்வதை தான் வழக்கமாக கொண்டு உள்ளனர். இவர்கள் வசிக்கின்ற பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியாகும். இங்கு புலி, கரடி, சிறுத்தை, யானை, மான், மிளா, குரங்கு, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும், அரிய வகை மூலிகைகளும் நிறைந்து காணப்படுகின்றன.
சின்னமயிலாறு பகுதி மக்கள் பெரியமயிலாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் தோட்டம் அமைத்து அங்கு கிழங்குகள், முந்திரி, மிளகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளனர். அவர்கள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்வது வழக்கம். மேலும் எலுமிச்சை, நார்த்தை ஆகியவற்றையும் பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு தேவையான வாழை, பலா, மா, தேங்காய் உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே விளைவித்துக் கொள்கிறார்கள். அரிசி, பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட் களை அங்குள்ள ரேஷன் கடை மூலம் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் மெயின் ரோட்டில் உள்ள கடைகளிலும் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
இப்படி வாழ்ந்து வரும் காணி இன மக்கள் கொரோனா அச்சுறுத்தலால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். இதுகுறித்து காணி சமுதாய பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவால், எங்கள் இன மக்களுக்கு கிடைக்கும் உதிரி வருமானமும் கிடைக்காமல் போய்விட்டது. அதாவது வனத்துறையில் தினக்கூலியாக வேலைக்கு செல்வோம். அந்த வேலை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வனப்பகுதியில் கிழங்கு எடுத்து அதை வத்தல் ஆக்குவது, ஜிப்ஸ் தயாரிப்பது தடைப்பட்டு இருக்கிறது. ஏனெனில் கடைகள் இல்லாததால் வத்தலை யாரும் வாங்குவது இல்லை. இதனால் வருமானம் எதுவும் இல்லை.
தற்போது அரசு நிவாரண நிதி ரூ.1,000, வனத்துறை சார்பில் 2 முறை குடிமை பொருட் கள் வழங்கினார்கள். அந்த பொருட்களை கொண்டு இந்த மாதம் சமாளிக்க முடியும். ஆனால் ஊரங்கு நீடிக்குமேயானால் எங்கள் நிலைமை மிகவும் பாதிக்கப்படும். எனவே, அரசு மாதந்தோறும் கொடுக் கும் குடிமை பொருட்களை இருமடங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் விக்கிரமசிங்கபுரத்துக்கு சென்று வருவோம். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எங்களிடம் உள்ள கிழங்கு, தேன், தேங்காய், வாழை, பலா உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காணி குடியிருப்பு மக்களை சந்தித்த அம்பை தாசில்தார் கந்தப்பன், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story