விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கால் விற்பனை பாதிப்பு: ரூ.50 கோடி மிளகாய் வத்தல் தேக்கம் - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்


விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கால் விற்பனை பாதிப்பு: ரூ.50 கோடி மிளகாய் வத்தல் தேக்கம் - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2020 4:15 AM IST (Updated: 10 April 2020 11:47 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டதால் ரூ.50 கோடி மதிப்பிலான மிளகாய் வத்தல் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதிகளான விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் மானாவாரி விவசாயம் பெரிதும் நடைபெறுகிறது. வானம் பார்த்த கரிசல் பூமியான இங்கு பெரும்பாலான விவசாயிகள் மிளகாய், உளுந்து, பாசி பயறு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கம்பு போன்றவற்றை பயிரிடுகின்றனர். இங்கு பெரும்பாலானவர்கள் பருவமழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். சில விவசாயிகள் கிணற்று பாசனம் மூலமும் பயிரிடுகின்றனர்.

விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தல் (முண்டு ரகம்) அதிக காரத்தன்மையுடன் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. எனவே, அவற்றை இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். விளாத்திகுளம் பகுதியில் தற்போது சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் வத்தல் பயிரிட்டுள்ளனர். 90 நாள் பயிரான மிளகாய் செடிகளில் 4 அல்லது 5 முறை பழங்களை பறித்து, அவற்றை வெயிலில் காய வைத்து, வத்தலான பிறகு விற்பனைக்கு அனுப்புவார்கள்.

தற்போது விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் செடிகளில் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனைக்கு அனுப்புவதற்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் பெரும்பாலானவர்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுவதால், சில தொழிலாளர்களே விவசாய பணிகளுக்கு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்தும் விவசாய தொழிலாளர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. இதனால் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களே இரவும் பகலுமாக அறுவடை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்ட சில இடைத்தரகர்கள், வியாபாரிகள் இணைந்து விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வத்தல் கொள்முதல் செய்வதற்கு பேரம் பேசுகின்றனர். வெளிமார்க்கெட்டில் ஒரு குவிண்டால் முண்டு வத்தல் ரூ.18 ஆயிரத்துக்கு விற்றாலும், விவசாயிகளிடம் ரூ.9 ஆயிரத்து 500-க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு கேட்கின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் விளைவித்த மிளகாய் வத்தல் மூட்டைகளை விளாத்திகுளம், புதூர் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிட்டங்கிகள், தனியார் குடோன்கள், வீடுகள் போன்றவற்றில் சேமித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கரில் மிளகாய் செடி பயிரிடுவதற்கு ரூ.13 ஆயிரம் வரையிலும் செலவு செய்துள்ளோம். கடந்த ஆண்டு மிளகாய் வத்தல் ஒரு குவிண்டால் ரூ.14 ஆயிரத்துக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு ஊரடங்கை சாதகமாக்கிக்கொண்டு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய முயற்சிக்கின்றனர்.

எனவே, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், கூட்டுறவு சங்க கிட்டங்கிகளில் வத்தல் மூட்டைகளை சேமித்து வைத்துள்ளோம். அவற்றுக்கு இந்த மாதம் வரையிலும் வாடகை வசூலிக்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். ஊரடங்கால் விளாத்திகுளம் பகுதியில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 5 ஆயிரம் டன் மிளகாய் வத்தல் தேக்கம் அடைந்துள்ளன. எனவே, அவற்றை அரசே கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story