கொரோனா வார்டு அமைக்கப்பட்டதால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு இடமாற்றம்
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளதால் பிரசவ வார்டு அங்கிருந்து திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்துக்கு சுமார் 60 பிரசவங்கள் வரை நடைபெற்று வந்த நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தற்போது இங்கு கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் 150 படுக்கை வசதிகள் உள்ளன. சிவகாசி பகுதியில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையில் பேறுகால சிகிச்சை பெற்று வந்த பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க தற்போது இங்கு பிரசவம் பார்ப்பது இல்லை.
இதற்கு பதில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ பிரிவில் பணியாற்றி வந்த அனைத்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தற்போது திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்கள்.
அதே போல் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பெரும் காயம் அடைந்தவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் இனி திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றி அங்கேயே சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு என அனைத்து பகுதிகளையும் ஒதுக்க வேண்டும். அப்போது தான் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story