பரோலில் வந்து மாயமானார் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, பரோலில் வந்து 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். தற்போது கொரோனா வைரசுக்கு பயந்து வீட்டுக்கு வந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரவி என்ற வெள்ளை ரவி (வயது 45). ஒரு கொலை வழக்கில் 2014-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
25.7.14 அன்று புழல் மத்திய சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் உள்ள குமரன் நகரில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்தார். ஆனால் பரோல் முடிந்ததும் மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார். அவரை வண்ணாரப்பேட்டை போலீசார் கடந்த 6 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு ரவி, ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா கெங்கம்மாகுடி என்ற இடத்தில் வீடு எடுத்து தனியாக தங்கி, அங்கு துணி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அச்சம் அடைந்த ரவி, ஆந்திராவில் இருந்து மீண்டும் திருவொற்றியூருக்கு வந்து சாத்தாங்காடு பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் ரவியை கைது செய்து அருகில் உள்ள சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 ஆண்டுகள் போலீசாரை ஏமாற்றி தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி ரவியை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story