கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்காக சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக விடுதிகள், முகாம்களாக மாற்றம் - மாநகராட்சி நடவடிக்கை


கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்காக சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக விடுதிகள், முகாம்களாக மாற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 11 April 2020 4:34 AM IST (Updated: 11 April 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தங்குவதற்கு சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக விடுதியின் அறைகளை முகாம்களாக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறியும் ‘ராப்பிட் டெஸ்ட்’ ஆரம்பித்ததும், உடனுக்குடன் முடிவுகள் தெரியவரும். அந்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும்பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கு தேவையான இடங்களை மாநகராட்சி முனைப்புடன் ஏற்பாடு செய்து வருகிறது.

குறிப்பாக, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதி அறைகளை தனிமைப்படுத்தப்படுபவர்கள் தங்குவதற்கான முகாம்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அடையாறில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 2 கல்வி நிறுவனங்களும் மிகப்பெரிய நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் தங்கும் விடுதி அறைகள் உள்ளன.

இந்த விடுதி அறைகளை முகாம்களாக மாற்றுவதற்கு ஏதுவாக, அதை ஒதுக்கித்தர மாநகராட்சி கேட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி., யில் தங்கி இருக்கும் மாணவர்கள் சிலரை அறைகளை காலி செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அந்த மாணவர்கள் தங்குவதற்காக மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தேவை இருக்கும்பட்சத்தில் இந்த கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள பிற கட்டிடங்களையும் முகாம் அமைக்க கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story