கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு இல்லாத புனித வெள்ளி நிகழ்வுகள்
கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு இல்லாமலேயே புனித வெள்ளி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஈரோடு,
கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று சிலுவைப்பாதை. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வினையும், அவர் சிலுவை சுமந்து பாடுகள் பட்டதையும் நினைவு கூறும் இந்த சிலுவைப்பாதை புனித வெள்ளியன்று அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விமரிசையாக நிறைவேற்றப்படும் வழிபாடாகும்.
இந்த ஆண்டு புனித வெள்ளியை முன்னிட்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தொடங்கியது. சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் நோன்பு இருந்து கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக அனைத்து ஆலயங்களும் மூடப்படும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், அந்தந்த ஆலயங்களின் பங்குத்தந்தையர் வழிகாட்டுதலின் பெயரில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.
கடந்த 5-ந் தேதி குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டங்கள் எந்த வகையான ஊர்வலம், மக்கள் கூட்டம் இல்லாமல் முடிந்தது. அந்தந்த ஆலயங்களில் பங்குத்தந்தையர்கள் மட்டுமே திருப்பலி நிறைவேற்றினார்கள். இதுபோல் நேற்று முன்தினம் பெரிய வியாழன் நடைபெறும் நற்கருணை இடமாற்றம் எளிமையாக, திருச்சபை வழிபாட்டு முறைகளுடன் நடந்தது.
பாதம் கழுவும் நிகழ்வு நடைபெறாமலேயே இருந்தது. அதைத்தொடர்ந்து தொடர் ஆராதனை நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றினார்கள். நேற்று புனித வெள்ளி நாளாகும். வழக்கமாக ஆலயங்களில் பக்தர்கள் கூடி வந்து ஏசுவின் திருச்சிலுவை பாடுகளை நினைவுகூர்ந்து 14 தலங்களில் சிறப்பு பிரார்த்தனை நிறைவேற்றுவார்கள். ஆனால், நேற்று அந்த நிகழ்வு நடைபெறவில்லை.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் பகல் 11 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு நடக்கும். நேற்று ஆலயம் வெறிச்சோடி இருந்தது. பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை லாரன்சு ஆகியோர் வழிபாடுகளை தனியாக நடத்தினார்கள். சிலுவை முத்தம் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இன்று (சனிக்கிழமை) இரவு பாஸ்கா விழா அதைத்தொடர்ந்து ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பினை நினைவு கூர்ந்தும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அறிவித்து உள்ளார்.
ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நேற்று புனிதவெள்ளி நிகழ்வுகள், பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை. வழக்கமாக சிலுவை மரணத்துக்கு முன்பு ஏசு சிலுவையில் தொங்கியபடி கூறிய 7 வசனங்கள் குறித்து ஆராதனை நடைபெறும்.
ஊரடங்கு காரணமாக ஆலயத்தில் எந்தவிதமான நிகழ்வுகளும் நேற்று நடைபெறவில்லை. ஆலையம் பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் சமூக ஊடகம் மூலம் ஆலய உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பிரார்த்தனை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story