யார் வீட்டில் தங்குவது என்பதில் சிக்கல்: ஊரடங்கு உத்தரவால் 2 பெண்டாட்டிக்காரர் திண்டாட்டம் - நண்பர் வீட்டில் தஞ்சம் புகுந்தார்


யார் வீட்டில் தங்குவது என்பதில் சிக்கல்: ஊரடங்கு உத்தரவால் 2 பெண்டாட்டிக்காரர் திண்டாட்டம் - நண்பர் வீட்டில் தஞ்சம் புகுந்தார்
x
தினத்தந்தி 11 April 2020 5:35 AM IST (Updated: 11 April 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் தங்கள் வீட்டில் தங்குமாறு இரு மனைவிகளும் பிடிவாதம் செய்ததால் யார் வீட்டில் தங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 பெண்டாட்டிக்காரர் திண்டாடினார். இந்த நிலைமையை சமாளிக்க அவர் நண்பர் வீட்டில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 35 வயது வாலிபர். இவர் அந்தப்பகுதியில் சொந்தமாக ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு (2019) முதல் மனைவிக்கு தெரியாமல் வாலிபர், வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். வேலை சம்பந்தமாக வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு அந்த நபர் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது மனைவி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இதுபற்றி முதல் மனைவிக்கு தொியவந்தது. இதையடுத்து அந்த பெண் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இதையடுத்து அந்த நபர் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் பெற்றோருடன் பேசினார். அதாவது, நான் தொழிற்சாலை நடத்திவருகிறேன். போலீசார் என்னை கைது செய்தால் எனது தொழில் பாதிக்கும், மேலும் நமது குடும்பத்திற்கு தான் அவமானம் என்று கூறினார்.

ஊரடங்கு உத்தரவால்...

இதனால் நான் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், இரண்டாவது மனைவி வீட்டில் ஒரு வாரம் தங்குகிறேன் என்று பேசினார். இதை அவரின் 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி முதல் மனைவி வீட்டில் ஒரு வாரம், 2-வது மனைவி வீட்டில் அடுத்த வாரம் என்று தங்கியிருந்து வந்தார்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் கர்நாடகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த வாலிபர் 2-வது மனைவி வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவரது முதல் மனைவி தனது வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் அவரது முதல் மனைவி இதுபற்றி மீண்டும் மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்தார். அவர்கள் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் ஊரடங்கு உத்தரவால் முதல் மனைவி வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்று கூறினார்.

நண்பர் வீட்டில் தஞ்சம்

இதையடுத்து முதல் மனைவியிடம் மகளிர் உதவி மையத்தின் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உங்கள் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துவிட்டனர். அதே வேளையில் 2-வது மனைவியும் வெளியே செல்லக் கூடாது என்றும், எனது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் வாலிபரிடம் வலியுறுத்தியுள்ளார். இரு மனைவிகளும் பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், விரக்தி அடைந்த நிலைமையை சமாளிக்க வாலிபர் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் தற்போது இந்த விவகாரத்திற்கு சுமுக தீர்வு கிடைத்துள்ளது.

Next Story