கொரோனா பாதிப்பை கண்டறிய நடமாடும் மருத்துவ பரிசோதனை மையம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய நடமாடும் பரிசோதனை மையத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
வாலாஜா,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வற்காக நடமாடும் மருத்துவ பரிசோதனை மைய வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் மருத்துவ பரிசோதனை மையம் மூலம் முதல்கட்டமாக மேல்விஷாரம் பகுதியில் உள்ள மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சென்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேர். அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முழுவதுமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள உள்ள 26 பேருக்கும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 224 பேரில் 86 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீதமுள்ள நபர்களுக்கும் பரிசோதனை முடிவுகள் வர உள்ளது. நடமாடும் மருத்துவ பரிசோதனை மையம் மூலம் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிங்காரவேலன், கொரோனா வைரஸ் தொடர்பு அதிகாரி பிரகாஷ் அய்யப்பன் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story