மயிலாடுதுறை அருகே, கைதான 12 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்
மயிலாடுதுறை அருகே கைதான 12 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் உள்ள ஜாமியா மிஸ்பாகுல்குதா பள்ளிவாசலுக்கு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி பிரான்ஸ், பெல்ஜீயம், கேமரூன், காங்கோ ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 10 முஸ்லிம்களும், பீகார், மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 2 முஸ்லிம்களும் மத பிரசாரத்துக்காக வந்துள்ளனர்.
இந்த 12 முஸ்லிம்களும், அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயிலில் சென்னைக்கு புறப்பட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள், நீடூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் தடையை மீறி மதபிரசாரம் செய்ய முயன்றதாக நீடூர் கிராம நிர்வாக அலுவலர் அருள், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதபிரசாரம் செய்ய வந்த 12 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நீதிபதி ரிஸ்வானாபேகம், 12 பேரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 12 பேரும் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story