ஒரத்தநாடு அருகே, முன்விரோதத்தில் வயலில் தூங்கி கொண்டிருந்த விவசாயி சரமாரி வெட்டிக்கொலை - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ஒரத்தநாடு அருகே, முன்விரோதத்தில் வயலில் தூங்கி கொண்டிருந்த விவசாயி சரமாரி வெட்டிக்கொலை - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 April 2020 10:15 PM GMT (Updated: 11 April 2020 3:30 AM GMT)

ஒரத்தநாடு அருகே, முன்விரோதம் காரணமாக வயலில் தூங்கிக்கொண்டு இருந்த விவசாயி, சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த வடக்குகோட்டையை சேர்ந்தவர் திருமேனி(வயது 65) விவசாயி. இந்த ஊரை அடுத்துள்ள சங்கரநாதர்குடிகாடு கிராமத்தில் திருமேனிக்கு சொந்தமாக ஆழ்குழாய் கிணறுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தற்போது நடவு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக திருமேனி கடந்த சில நாட்களாக தனது வயலிலேயே இரவு, பகலாக தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு திருமேனி தனக்கு சொந்தமான வயலிலேயே படுத்து தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் திருமேனியின் வயலுக்கு விவசாய பணிக்கு வந்தவர்கள், திருமேனி தலை, கை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து திருமேனியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இதுகுறித்து திருமேனியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலகண்ணன், பாப்பாநாடு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட திருமேனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. மேலும் விரல்ரேகை நிபுணர்கள் அங்கு வந்து சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொலை தொடர்பாக பாப்பாநாடு போலீசில் திருமேனியின் மகன் அய்யப்பன் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் குடும்பத்தினருக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், இந்த முன்விரோதம் காரணமாகவே தனது தந்தை கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த கொலையில் 11 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் விசாரணைக்கு பிறகே இந்த கொலை குறித்த முழு தகவல்களும் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story