அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - அலுவலர்களுக்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்


அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - அலுவலர்களுக்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 April 2020 10:45 PM GMT (Updated: 11 April 2020 4:02 AM GMT)

அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லம்பள்ளியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அலுவலர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினார்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, தர்மபுரி ஊராட்சி ஒன்றியங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், நல்லம்பள்ளி, தர்மபுரி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கோடைகாலம் தொடங்கி உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கவும், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், தாசில்தார்கள் சரவணன், சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், வடிவேல், சகீலா, கலைச்செல்வி, ஒன்றியக்குழு தலைவர்கள் மகேஸ்வரி பெரியசாமி, நீலாபுரம் செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு திரும்பிய 9,865 பேர் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. வெளிமாவட்டங்களில் இருந்து மளிகை பொருட்கள், காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களின் டிரைவர்களையும் பரிசோதித்து கண்காணிக்கிறோம். அவர்களில் யாருக்காவது சளி, காய்ச்சல் கண்டறியப்பட்டால் தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து உடல்நிலையை உறுதி செய்தபின்னரே வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று கூறினார்.


Next Story