கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது


கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2020 4:00 AM IST (Updated: 11 April 2020 9:32 AM IST)
t-max-icont-min-icon

கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாராயம் காய்ச்சிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு,

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகள், மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் சிலர் சாராயம் காய்ச்சும் வேலையை தொடங்கி உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சும் சம்பவம் நடந்தது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து அதை ஒழித்தனர். ஆனால், தற்போது மீண்டும் சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கடமலைக்குண்டு அருகே முத்தாலம்பாறையில் உள்ள ஒரு மலைக்கரட்டு பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த கும்பல் தப்பியோடி விட்டது. இதையடுத்து அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு ஒரு பேரலில் ஊறல் போடப்பட்டு இருந்தது. உடனே அதை போலீசார் உடைத்து, தரையில் கொட்டினர். இந்த சம்பவம் குறித்து தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் வருசநாடு அருகே கவுண்டர்குடிசை கிராமத்தில் தனியார் தோட்டத்தில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக வருசநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சீனிச்சாமி (வயது 73), ஜெயமுத்துப்பாண்டி (38) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊறல்களை கீழே கொட்டி அழித்தனர்.

இதேபோல் கருப்பையாபுரம் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா (40), பவுன்ராஜ் (42), பிச்சைமணி (27), சாமிநாதன் (44), அழகுமலை (33), ஈஸ்வரன் (48) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story