கிருஷ்ணகிரி, ஓசூரில் ஊரடங்கையொட்டி கட்டுப்பாடு: இருசக்கர வாகன ஓட்டிகள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் வெளியே வர அனுமதி - கலெக்டர் பிரபாகர் உத்தரவு
கிருஷ்ணகிரி, ஓசூரில் ஊரடங்கையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி முதல் ஒரு மணி வரையில் காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை சார்பில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி அளித்து ஒவ்வொரு நாளும் ஒரு நிறம் ஒதுக்கப்பட்டு வாகனங்களின் பெயர் பலகையில் பெயிண்ட் பூசப்படும். சனி, செவ்வாய் வெளியே வர மஞ்சள் பெயிண்டும், ஞாயிறு, புதன் வெளியே வர சிவப்பு வண்ணமும், திங்கள், வியாழன் வெளியே வர பச்சை வண்ணமும் பூசப்படும்.
இதைத் தவிர மருத்துவ தேவை, இதர அவசர தேவைக்கு உரிய ஆவணங்களை இருசக்கர வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் காட்ட வேண்டும். அத்தியாவசிய உணவு பொருட்கள், காய்கறிகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட மூத்த குடிமகன்கள் யாருக்காவது மருந்து, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் வாங்க வேண்டிய தேவையிருப்பின், காவலர் படை எண்களான 9498170673, 9498101113, 8883672901 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியம் பகுதி 1, பகுதி 2, பாரதியார் நகர், ராஜீவ்நகர், காமராஜ் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூத்த குடிமகன்கள் 9498101110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல ஓசூரில் வாகன ஓட்டிகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மருந்து, மாத்திரைகள் மற்றும் இதர பொருட்கள் தேவைபடுவோர் 94981 01093 மற்றும் 94981 01104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story