கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு: மரக்காணம் உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு - 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு


கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு: மரக்காணம் உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு - 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
x
தினத்தந்தி 11 April 2020 12:59 PM IST (Updated: 11 April 2020 12:59 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் காரணமாக மரக்காணம் உப்பளத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைஇழந்துள்ளனர்.

பிரம்மதேசம்,

தமிழகத்தில் உப்பு உற்பத்தி செய்வதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரம் மாவட்டம் மரக் காணம் உப்பளத்தில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மரக்காணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும், மாநில அரசுக்கு சொந்தமாக 1,500 ஏக்கர் நிலப்பரப்பிலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் உப்பு பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.

மரக்காணத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் தேவைக்கு போக மீதமுள்ளவை புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. இந்த பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கோடைகாலம்தான் உப்பு உற்பத்திக்கு ஏற்ற சூழ்நிலை. இந்த காலக்கட்டத்தில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படும்.

இந்த நிலையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பிறநாடுகளுக்கும் பரவியது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்திலும் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஸ், லாரி, ரெயில், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் வேலைக்கு செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.

ஊரடங்கால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் அதனை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லமுடியவில்லை. உப்பளத்தில் இருந்து வரப்புகளில் சேமித்து வைக்கப்பட்ட உப்பை அள்ளவும் தொழிலாளர்கள் இல்லை. இதனால் உப்பள வரப்புகளில் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உப்பள தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் முழுக்க, முழுக்க உப்பு உற்பத்தி தொழிலையே நம்பி இருக்கிறோம். தினமும் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 16 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே ஊரடங்கு முடியும் வரை எங்களுக்கு போதிய அரிசி, காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story