ஊரடங்கால் முடங்கிய மீன்பிடி தொழில்: திருட்டை தடுக்க வலைகள், படகுகளை துணிபோட்டு மூடிவைத்திருக்கும் அவலம் - நிவாரண தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை


ஊரடங்கால் முடங்கிய மீன்பிடி தொழில்: திருட்டை தடுக்க வலைகள், படகுகளை துணிபோட்டு மூடிவைத்திருக்கும் அவலம் - நிவாரண தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2020 1:52 PM IST (Updated: 11 April 2020 1:52 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் புதுச்சேரியில் மீன்பிடி தொழில் முடங்கியது. அதனால் மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருட்டை தடுக்க வலைகள், உபகரணங்களை துணி போட்டு மூடிவைத்திருக்கும் அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விவசாயம், நெசவு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மீன்பிடி தொழிலும் விதிவிலக்கல்ல. ஊரடங்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், அவர்களும், மீன்பிடி சார்ந்த தொழில் செய்வோரும் முடங்கிப்போயுள்ளனர்.

புதுச்சேரி பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு களிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த மீன்பிடி தொழிலானது பல்வேறுபட்ட மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று தந்ததோடு, பல லட்சம் ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தந்தது.

தமிழகம், புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் தமிழகம், புதுவை கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடை காலத்தில் மீன் இனங்கள் முட்டையிட்டு இனவிருத்தி செய்யும் காலமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த தடை காலங்களில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் நாட்டு படகு மூலமாக குறைந்த ஆழத்தில் முரல் வலை, நண்டு வலை, செங்கனி வலை போன்ற கடலின் மேற்பரப்பில் வலையை விரித்து மீன் பிடிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே 144 தடை உத்தரவால் 21 நாட்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தொடர்ந்து வரும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தால் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மீன் பிடி தொழிலுக்கு செல்லாததால் கடற்கரை ஓரங்களில் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் திருட்டில் இருந்து தடுக்க துணிகள் போட்டு மூடி வைத்து இருக்கும் அவலநிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

Next Story