தூத்துக்குடியில் கண்காணிப்பு பணி தீவிரம்: கொரோனா பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரி சேகரிப்பு
தூத்துக்குடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடமாடும் பரிசோதனை மையம் மூலம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மூதாட்டி நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதனால் 23 பேரை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தவர்கள் உள்ளிட்ட நேரடி தொடர்பில் இருந்தவர்கள் 79 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இல்லாமல், ஒரே கடையில் பொருட்கள் வாங்கியவர்கள், ஏதேச்சையாக சந்தித்து பேசியவர்கள் போன்ற தொடர்பில் இருந்தவர்கள் 344 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்படும் அனைவரையும் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் வேனின் உள்பகுதி கண்ணாடியால் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. அந்த கண்ணாடியில் ரப்பர் கைஉறை பொருத்தப்பட்டு உள்ளது. ஆய்வக நிபுணர் (டெக்னீசியன்) வேனின் முன்புறமாக கண்ணாடிக்கு அருகில் அமர்ந்து உள்ளார். பரிசோதனை செய்ய வேண்டிய நபர் வேனின் பின்புறமாக ஏறி கண்ணாடி அருகில் சென்று அமர வேண்டும்.
அப்போது, டெக்னீசியன் ரப்பர் கையுறையை அணிந்தபடி பரிசோதனை செய்ய வேண்டியவரின் சளி மாதிரிகளை சேகரிப்பார். பின்னர் அந்த மாதிரி சேகரித்த பாட்டிலை பரிசோதனை செய்யும் நபரிடம் கொடுத்து, அதனை பத்திரமாக அந்த அறையில் உள்ள பெட்டியில் வைக்க அறிவுறுத்துகிறார். அதன்படி வரிசையாக பொதுமக்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
இந்த பணிகள் நேற்று தூத்துக்குடி போல்டன்புரத்தில் தொடங்கியது. அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி நேற்று முன்தினம் இறந்ததால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முதல்கட்டமாக சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகர நல அலுவலர் அருண்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சளி மாதிரி சேகரிப்பு பணிகளை 2 நாட்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 344 பேருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி முடிக்கப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்ட 7 இடங்களிலும் உள்ள அனைத்து மக்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story