திருநங்கைகளுக்கு நிவாரண உதவிப்பொருட்கள் - தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
பெருந்துறையில் உள்ள திருநங்கைகளுக்கு நிவாரண உதவிப்பொருட்களை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு 60 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துதல், வீடுகளில் தனிமைப்படுத்துதல் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பகுதிகளும் சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம், தினசரி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் பெருந்துறை ஒன்றியக்குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும், அரசின் மூலம் பெற வேண்டிய உதவிகளை முறையாக பெற்று பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பெருந்துறை பகுதியை சேர்ந்த திருநங்கைகள் 10 பேருக்கு கொரோனா நிவாரண உதவியை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகுமார், அ.தி.மு.க. பேரூர் செயலாளர் கே.எம்.பழனிச்சாமி, முன்னாள் செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, இலக்கிய அணி தலைவர் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் மணி, சுப்பிரமணி, மோகன், சங்கர், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story