மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் தொடரும் தரமற்ற அரிசி வினியோகம்
மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு ஊரடங்கு மற்றும் தடை உத்தரவு பாதிப்பால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக அனைத்து ரேஷன்கார்டுதாரருக்கும் ரூ.1000 நிவாரண உதவியுடன் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 99 சதவீத ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டு விட்டது. ரேஷன்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் மூலம் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
அனைத்து ரேஷன்கடைகளிலும் நிவாரண தொகை பெற்றவர்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தபோதிலும் இன்னும் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. சில பகுதிகளில் பாமாயில் வினியோகம் செய்யப்படவேயில்லை.
வேறு சில பகுதிகளில் சர்க்கரை வழங்கப்படாத நிலை உள்ளது. அரிசி வினியோகிக்கப்பட்ட போதிலும் வினியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாக இருக்கும் நிலை தொடருகிறது. ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பரவலாக பொதுமக்கள் புகார் கூறினர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரை சந்தித்து தரமற்ற ரேஷன் அரிசி வினியோகத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தினர். நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அனைத்து ரேஷன்கடைகளுக்கும் தரமான அரிசி அனுப்பப்பட்டு இருப்பதாக ஆய்வுக்கு சென்று இருந்த எம்.எல்.ஏ.யிடம் தெரிவித்திருந்த போதிலும் தரமற்ற அரிசி வினியோகம் தொடருகிறது.
இது ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனில்லாமல் போய் விடுகிறது. வெளிச்சந்தையில் அரிசி வாங்கமுடியாத நிலையில்தான் ரேஷன் அரிசியை நம்பி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்கள் பசியாறி வருகின்றனர். அந்த அரிசியும் தரமில்லாமல் இருந்தால் எந்த நோக்கத்துக்காக அரசு விலையில்லா அரிசி வினியோகத்தை தொடங்கியுள்ளதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன்கடைகளில் தரமான அரிசி வினியோகம் செய்ய வழங்கல் துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் ரேஷன்கடைகளில் இருப்பில் இருக்கும் தரமற்ற அரிசி மூடைகளை முடக்குவதற்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகிக்கப்பட்டால் பொதுமக்கள் சமூக விலகலை புறக்கணித்து போராடும் நிலை ஏற்பட்டு விடும்.
Related Tags :
Next Story