மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்கள் குடோனுக்கு மாற்றம்


மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்கள் குடோனுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 12 April 2020 3:45 AM IST (Updated: 12 April 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்கள் குடோனுக்கு மாற்றப்பட்டது.

மாமல்லபுரம், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மது கிடைக்காத விரக்தியில் போதை ஆசாமிகள் பலர் டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதையடுத்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவின்பேரில் மாமல்லபுரம் புறவழிச் சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் வடநெம்மேலியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை என 3 கடைகளின் சீல் உடைக்கப்பட்டு அதிலிருந்த மதுபாட்டில்கள் நேற்று மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வேனில் ஏற்றப்பட்டு போலீஸ் சோதனை சாவடி எதிரில் உள்ள ஒரு குடோனுக்கு மாற்றப்பட்டது. அங்கு மதுபாட்டில்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

முன்னதாக 3 டாஸ்மாக் கடைகள் முன்பும் மது பிரியர்கள் பலர் மது வாங்கும் ஆவலில் குவிந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். எனினும் சிலர் தங்களுக்கு மது கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story