கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்ப்பு
கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விவரங் களும் சேகரிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 69 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது.
இதில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 39 பேர், தாராபுரம் அரசு மருத்துவமனையில் 10 பேர், உடுமலை அரசு மருத்துவமனையில் 10 பேர் என மொத்தம் 59 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற 10 பேர் முகவரியைவைத்து அடையளம் காணும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு சென்றவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் லண்டன் சென்று வந்த, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் கொரோனா அதிக பாதிப்பிற்கு சிவப்பு நிறம், பாதிப்பிற்கு ஆரஞ்சு நிறம், லேசானா பாதிப்பு மஞ்சள் நிறம், பாதிப்பு இல்லாத மாவட்டம் பச்சை நிறம் என பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசின் பட்டியலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிப்பதன் மூலம் பாதிப்பு உள்ள மாவட்டங்களை எளிதில் கண்காணிக்க முடியும்.
இவ்வாறு பட்டியலிடுவதால் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரவாமல் இருக்க மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். மேலும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் அந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story