தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: சென்னையில் கொரோனா பீதிக்கு மத்தியில் திருட்டு அதிகரிப்பு - ஊரடங்கால் கொள்ளையர்கள் உற்சாகம்
சென்னையில் கொரோனா பீதிக்கு மத்தியில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருந்து வருகிறது. எனவே கொரோனா நோய் தங்களுக்கு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் சென்னை மக்கள் சிலர் வெளியே வராமல் வீட்டுக் குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.
இந்தநிலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளை நோட்டமிட்டு வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளனர்.
சென்னை வடபழனியில் மத்திய அரசு ஊழியரிடம் செல்போன் பறிப்பு, நுங்கம்பாக்கத்தில் நடந்து சென்ற மீனாட்சி என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு, செங்குன்றத்தில் 34 வயதுடைய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு, சூளைமேட்டில் மகளுடன் மொபட் வாகனத்தில் சென்ற திலகம் (65) என்ற மூதாட்டியின் பணப்பை பறிப்பு, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஆசாவிடம் 7 பவுன் நகை பறிப்பு, அயனாவரத்தில் சாந்தி (67) என்ற மூதாட்டியிடம் 1½ பவுன் பறிப்பு என சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
மேலும் புழல் பகுதிகளில் மளிகை கடைகளில் நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இதனால் கொரோனா பீதியில் இருக்கும் மக்களிடம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போன்று திருட்டு சம்பவங்கள் அமைந்து உள்ளன. முகவரி கேட்பது போன்று நடித்து தான் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவு நடக்கிறது.
எனவே பொதுமக்களும், பெண்களும் உஷாராக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது நகைகள் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலையில் செல்லும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சாலைகளில் போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதால் வழிப்பறி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் குறுகிய சந்துகள், தெருக்கள் வழியாக நுழைந்து போலீசார் கண்ணில் படாமல் தப்பி விடுகிறார்கள்.
ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை எண்ணி மனவேதனையில் இருக்கும்போது, கொள்ளையர்கள் மட்டும் உற்சாகமாக சுற்றி வருகிறார்கள். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் வழிப்பறி திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தற்போது ஊரடங்கு உத்தரவை அனைவரும் முறையாக கடைபிடித்து வீட்டில் இருந்தால் போலீசாரின் வழக்கு நடவடிக்கையில் இருந்து மட்டும் அல்ல, திருடர்களின் கைவரிசையில் இருந்து தப்பிக்கலாம் என்பதையே வழிப்பறி சம்பவங்கள் உணர்த்துகின்றன.
Related Tags :
Next Story