சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்காவிட்டால் 30-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரும் - மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை
சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்காவிட்டால் 30-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரும் என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஊரடங்கு 30-ந் தேதிக்கு பிறகும் தொடர வாய்ப்பு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் 30-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும். இதனை மனதில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும்.
கொரோனா பாதிப்பை பொறுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சிவப்பு மண்டலம், ஆரஞ்ச் மண்டலம், பசுமை மண்டலம் என பிரித்து கையாள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக கருதப்படும். 15 அல்லது அதற்கு குறைவான கொரோனா நோயாளிகள் இருக்கும் மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலம் என கருதப்படும். கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லாத அல்லது ஒரு நோயாளி இருக்கும் மாவட்டம் பசுமை மண்டலமாக அழைக்கப்படும். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் 91 சதவீதம் பேர் மும்பை, தானே, நவிமும்பை, பால்கர், புனே ஆகிய பகுதிகளில் உள்ளனர். எனவே இந்த பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக கருதப்படுகிறது.
தொழிற்சாலைகள் 100 சதவீத விதிமுறைகளை பின்பற்றி தங்களது தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கலாம் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி பிரதமர் விரிவான அறிவிப்பை வெளியிடுவார்.
இவ்வாறு மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
Related Tags :
Next Story