கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் எப்போது? - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில்
கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்பதற்கு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி (உயர்கல்வி) அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஜூம் தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தொழில்நுட்ப வசதி கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வகுப்பு வீடியோக்களை யூ டியூப் சேனல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதை கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள், பெற்றோர் ஆதங்கப்பட தேவை இல்லை.
தேர்வு நடத்த மாட்டோம்
கொரோனா காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் கொரோனா ஒழிக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும். அதன் பிறகு தேர்வு நடத்தப்படும்.
மே 31-ந் தேதி வரை தேர்வு நடத்த மாட்டோம். அதன் பிறகே தேர்வு நடத்துவது குறித்த தேதி அறிவிக்கப்படும். அதனால் மாணவர்கள் வீடுகளில் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story