திருப்பத்தூரில் இருந்து ஆரஞ்சு பழங்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவிப்பு - குளிர்சாதன வசதி ஏற்படுத்தித்தர கோரிக்கை
திருப்பத்தூரில் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்முடியாமல் வியாபாரிகள் தவித்துவருகிறார்கள். இதனால் பழங்களை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி ஏற்படுத்திதரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா பெரியகரம் கிராமத்தில் பழ மண்டிகள் உள்ளது. இங்கு மொத்தவியாபாரம் செய்யப்படுகிறது. தற்பொழுது ஆரஞ்சு பழ சீசன் ஆகும். இந்த சீசன் வருகிற ஜூன் மாதம் வரை நீடிக்கும். திருப்பத்தூர் பழ மண்டிக்கு மராட்டியம், அமராவதி போன்ற இடங்களில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆரஞ்சு பழங்கள் வந்துகொண்டிருந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பழ மண்டிக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஆரஞ்சு பழம் வருகிறது.
இங்கிருந்து சேலம், காஞ்சீபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இங்கிருந்து லாரிகளில் அனுப்ப முடியாததால் ஆரஞ்சு பழம் பெருமளவில் தேக்கமடைந்து வீணாகி விட்டது. ஆரஞ்சு பழத்தில் கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு விட்டமின் சி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததால் நல்ல கிராக்கி இருக்கும். ஆனால் திருப்பத்தூரில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மூடப்பட்டதாலும், தள்ளுவண்டி கடைகளில் பழம் விற்க யாரும் வராததாலும் ஆரஞ்சு பழம் பெருமளவில் தேக்கம் அடைந்து கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை கடைக்காரர்கள் வாங்கிச்சென்று ரூ.50 வரை விற்கிறார்கள்.
இதுகுறித்து மொத்த பழ விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அன்வர் சுல்தான் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டிய லாரிகள் செல்லவில்லை. அதேபோல வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய லாரிகளும் வர இயலவில்லை. தமிழக அரசு 12 மணி வரை பழக் கடைகளை திறக்கலாம் என்று கூறியபோதும் காலை 8 மணியோடு கடைகளை மூடவேண்டும் என போலீசார் கூறுகிறார்கள். இதனால் பெருமளவில் ஆரஞ்சு பழம் விற்க முடியவில்லை .
இதுமட்டுமின்றி இந்தப்பகுதியிலிருந்து ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மாங்காய் எடுத்து செல்ல வேண்டும். மாங்காய்களை லாரிகளில் எடுத்து செல்ல இயலாத நிலை உள்ளது. நமது பகுதியில் சப்போட்டா அதிகளவில் விளைகிறது. அதனை பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரஞ்சு மற்றும் இதர பழங்கள் மண்டிகளில் தேங்கியிருப்பதால், அதை பாதுகாப்பாக வைக்க அரசு சார்பில் 1,500 டன் குளிர்சாதன வசதி கொண்ட கிடங்கு ஏற்படுத்தி தரவேண்டும். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பயனடைவார்கள் எனக் கூறினார்.
தற்பொழுது பல டன் ஆரஞ்சுப்பழம் மண்டிக்கு கொண்டுவரப்பட்டு அதனை தரம்வாரியாக பிரிக்கவும், லாரிகளில் ஏற்றி இறக்கவும் ஆட்கள் வராததால் விற்பனை செய்யமுடியாமல் உள்ளது. எனவே பழத்தை லாரிகளில் எடுத்துச்செல்ல அரசு விதிகளை எளிமைப்படுத்தவும், பழம் விற்பனை செய்ய நேரத்தை ஒதுக்கித்தரவும் பழ வியாபாரிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story