அரியூர் அருகே மலைப்பகுதிகளில் சாராய கும்பலை பிடிக்க ஹெலிகேம் மூலம் போலீசார் சோதனை
அரியூர் அருகே உள்ளே மலைப்பகுதிகளில் சாராய கும்பலை பிடிக்க ஹெலிகேம் மூலம் போலீசார் சோதனை செய்தனர்.
வேலூர்,
ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாராய வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. மதுபிரியர்களும் எங்காவது சாராயம் கிடைக்குமா? என விசாரித்து அங்கு சென்று சாராயம் குடித்து வருகின்றனர். குறிப்பாக வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் ஒரு கும்பல் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதை தட்டிக் கேட்ட புலிமேடு பகுதி கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து 3 பேரை அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) கைது செய்தார். எனினும் அந்த மலைப்பகுதியில் சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் பல்வேறு இடங்களிலும் சாராய விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் மாவட்ட காவல்துறை திணறி வருகிறது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு தொடர்வதால் சாராய விற்பனையும் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்கள் மலைகளில் பதுங்குவதால் அவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே உள்ளது.
இந்த நிலையில் சாராய கும்பலை பிடிக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் புலிமேடு மலைப்பகுதியில் ஹெலிகேம் மூலம் சாராய கும்பலின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், புலிமேடு, சிவநாதபுரம், குருமலை, மாட்டுப்பாறை போன்ற இடங்களில் ஹெலிகேம் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் புலிமேடு மலைப்பகுதியில் சாராய கும்பலின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. சாராயம் காய்ச்சும் இடங்கள், விற்பனை இடங்களை கண்டறிந்துள்ளோம். விரைவில் சாராய கும்பலை சுற்றி வளைத்து கைது செய்வோம் என்றனர்.
Related Tags :
Next Story