கோவை ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
கோவை ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் ராமசாமி நகரில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அங்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன், ராமநாதபுரம் பங்கஜாமில் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் கோவை ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story