கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டரும் பாதிப்பா? காய்ச்சலுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு - குமரியில் பரபரப்பு
குமரியில் காய்ச்சலுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென இறந்தார். மேலும் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிய ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்திலும் கால்பதித்து, மக்களை கொத்து கொத்தாக விழுங்கி வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு வேகமாக இருக்கிறது. தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து தற்போது ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 10 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 15 பேருக்கு இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் உள்பட அவருடைய குடும்பத்தினர் 6 பேர், தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், அவருடைய மனைவியும் என 2 பேர், நாகர்கோவில் டென்னிசன் தெரு, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 2 பேர், மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சென்னை விமான நிலைய ஊழியர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர் என 5 பேர் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பெண் போலீசும், 3 ஆண்களும் இருமல், சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தொற்றுநோய் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடைய சளி மற்றும் ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. ஆனால் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 15 ஆகவே நீடிக்கிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடுமையான காய்ச்சலுடன் 53 வயது பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்று டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆனாலும் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற சந்தேகத்தில் இறந்தவரின் உடலில் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நேற்று 9 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர்களில் 6 பேர் தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்த, டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர். மற்றொரு பெண் நெல்லையைச் சேர்ந்தவர் ஆவார்.
அதே சமயத்தில், மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை விமான நிலைய ஊழியர் முன்னதாக தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் அந்த டாக்டர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் தனக்கு கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தின் காரணமாக அவர் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரிடம் ரத்தம் மற்றும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகளான சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் எதுவும் இல்லாததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த 10 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிய வரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story