அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர்: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது - கலெக்டர் தகவல்


அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர்: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 April 2020 10:15 PM GMT (Updated: 12 April 2020 2:26 AM GMT)

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது என்றும், அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

கொரோனா போன்ற வைரஸ் வராமல் தடுக்கும் முயற்சியில் நமது பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் பயனளிக்கிறது. சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கபசுர குடிநீரை பருகுவது நல்லது.

தற்போது பென்ட்லேண்ட் மருத்துவமனையிலும், சி.எம்.சி. மருத்துவமனையிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும்.

நில வேம்பு கசாயமும், கபசுர குடிநீரும் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் பாதிப்பை வெகுவாக குறைக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உள்ள சித்தா மருத்துவப் பிரிவில் இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

நிலவேம்பு கசாயத்தை அனைவருமே தொடர்ந்து 3 நாட்களுக்கு குடித்து வந்தால் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கபசுர குடிநீர் பருகுவதால் தொண்டை வலி, இருமல், தும்மல், சளி மற்றும் இடைவிடாத காய்ச்சல் முதலிய பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

வயிற்றுப்புண், மூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கர்ப்பிணிகள், மாதவிடாய் காலங்களில் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பருகுவது நல்லது.

இது தவிர தினமும் காலை, மாலை இருவேளைகளில் உப்பு கலந்த சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். மிதமான சுடு நீரை குடிக்கலாம். தொண்டை வலி, இருமல், தும்மல் மற்றும் சளி இருந்தால் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் தைலம் அல்லது நொச்சி அல்லது துளசி இலைகளை போட்டு மூக்கு, தொண்டைக்கு நீராவி பிடிக்கலாம்.

காலை 10 மணிக்கு முன் மாலை 4 மணிக்கு மேல் சூரியக்குளியல் எடுக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய பிராணவாயுவை அதிகரிக்கச் செய்யலாம். துளசிச் சாறு, நெல்லிக்காய் சாறு, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, மஞ்சள் கலந்து பருகலாம்.

வைட்டமின் சி, புரதச் சத்து அதிகமுடைய பழங்கள், தானிய வகைகள், முட்டை மற்றும் சுண்டல் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story