கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி 968 கேமராக்கள் மூலம் திருச்சி மாநகரை கண்காணிக்கும் போலீசார்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி திருச்சி மாநகரில் ஊரடங்கு எப்படி உள்ளது? என 968 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
திருச்சி,
திருச்சி மாநகரில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் சாலை விதிகளை மீறுகிறார்களா? என்றும், கண்காணிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரமாண்ட தொலைக்காட்சி பெட்டிகளில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக மாநகர காவல்துறை சார்பில் மட்டும் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடுகிற மத்திய பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் பகுதி, சாலை சிக்னல் சந்திப்புகள், ரவுண்டானாக்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 968 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் நகரில் இருசக்கர வாகன ஓட்டிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. எந்தெந்த பகுதியில் அதிக நடமாட்டம் உள்ளது என கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மட்டும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஷிப்டுக்கு 6 போலீசார் வீதம் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கவில்லை என புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு உடனடியாக சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நகரில் உள்ள 8 தற்காலிக காய்கறி சந்தையும் மூடப்பட்டு விட்டதால் வாகன நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது. மதியம் 1 மணிவரை சில வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்று வந்தன. ஆனால், பிற்பகல் 1 மணிக்கு மேல் பெரும்பாலான சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.
மேலும் எங்கெல்லாம் பிரச்சினை என தெரிந்தாலும் அவற்றை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணித்து கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருடன் இணைந்து தன்னார்வலர்கள் மற்றும் சாரணப்படை மாணவர்களும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story