திருச்சி மாநகரில் ஊரடங்கு கெடுபிடி: தற்காலிக சந்தைகள் மூடப்பட்டதால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது
திருச்சி மாநகரில் ஊரடங்கு கெடுபிடியாலும் தற்காலிக சந்தைகள் மூடப்பட்டதாலும் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காய்கறிகள் வாங்க செல்லவும், இதர அத்தியாவசிய தேவை மற்றும் ஆஸ்பத்திரி செல்லவும் மற்றும் மருந்துகடைகளுக்கு சென்று மருந்து வாங்கவும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வாகனங்களில் தேவையின்றி சுற்றி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும் ஊரடங்கிற்கு கட்டப்பட வில்லை. திருச்சி மாநகரில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே பொதுமக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் வாங்குவோர் தங்களது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சென்று வரவேண்டும் என்றும், 4 சக்கர வாகனம் பயணத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஆஸ்பத்திரி மற்றும் மருந்து வாங்க செல்வோருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகரில் 8 இடங்களில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்றும், இன்றும் சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக நேற்று திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களில் வெளியில் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இருசக்கர வாகனத்தில் தம்பதியாக வந்தவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா, கோட்டை அருணாசலம் மன்றம் ரவுண்டானா, ஜங்ஷன் ரவுண்டானா, தலைமை தபால் நிலைய ரவுண்டானா, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டிருந்த திருச்சி மத்திய பஸ் நிலையம், அண்ணா விளையாட்டரங்கம் முன்புறம், சத்திரம் பஸ் நிலையம், தென்னூர் உழவர்சந்தை திடல் உள்ளிட்ட பகுதியில் காய்கறிகள் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் இன்றி மைதானம் வெறுமையாக காணப்பட்டது. அதே வேளையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர் மட்டும் வழக்கம்போல வந்து சென்றனர்.
தற்காலிக காய்கறி கடைகள் மூடப்பட்டதையொட்டி, திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சந்து மற்றும் தெருக்களின் ஓரங்களில் சாலையோர வியாபாரிகள் சிலர் காய்கறிகளை விற்பனை செய்தனர். மேலும் தள்ளுவண்டிகள் மூலம் வீதி வீதியாக காய்கறிகள் விற்பனை செய்வோர் வழக்கமாக தங்களது தொழிலை மேற்கொண்டிருந்தனர்.
Related Tags :
Next Story