ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தம்: சிகிச்சைக்காக மனைவியை 145 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்து சென்ற தொழிலாளி - கிராம மக்கள் பாராட்டு
ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நேரத்தில் சிகிச்சைக்காக மனைவியை கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 145 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் அழைத்து சென்று வந்த தொழிலாளியை கிராம மக்கள் ஒன்று கூடி பாரட்டினர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 63). விவசாய கூலித்தொழிலாளியான இவரது மனைவி மஞ்சுளா. இவர், கடந்த சில வருடங்களாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அறிவழகன் தனது மனைவி மஞ்சுளாவை பஸ்சில் அழைத்து செல்ல முடியவில்லை. கார் மற்றும் வேறு வாகனங்களில் அழைத்து செல்ல அரசு அனுமதி பெற பல்வேறு விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதைப்பற்றி அவரால் அறிந்து கொள்ளவும் முடியவில்லை.
இந்த நிலையில் மஞ்சுளாவிற்கு நோயின் தாக்கம் அதிகரித்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அறிவழகன் தனது வயதான நிலையையும் பொருட்படுத்தாமல் மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மனைவியை சைக்கிளில் அழைத்துச்செல்வது என்று முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் தனக்கு சொந்தமான பழைய சைக்கிளில் மனைவியை உட்கார வைத்து புதுச்சேரிக்கு அழைத்து சென்றார். வழியில் தங்களுக்கு தேவையான உணவு, உடை, தண்ணீர் ஆகியவற்றை சைக்கிளில் வைத்ததுடன் அவரது மனைவியை பின்புறம் உட்கார வைத்து மயிலாடுதுறை, சீர்காழி வழியாக புதுச்சேரிக்கு கிளம்பினார்.
செல்லும் வழியில் தன்னை தடுத்த போலீசாரிடம் தனது நிலையை விளக்கினார். இதையறிந்த போலீசார் பலர் அவருக்கு தேவையான உதவிகள் செய்து செல்லும் வழியில் எளிதாக உள்ள சாலைகளை சொல்லி உதவினர். இதையடுத்து கும்பகோணத்தில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை அடைந்தார்.
அப்போது அங்கிருந்த டாக்டர்கள் அறிவழகனிடம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் எப்படி இவ்வளவு துாரம் வந்தீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர், சைக்கிளில் அழைத்து கொண்டு வந்தேன் என கூறியுள்ளார். அதைக் கேட்டதும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டி வர உங்களது வயது ஒத்துழைத்ததா? என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், எனது உடல்நிலையை பற்றி எனக்கு எதுவும் நினைக்க தோன்றவில்லை. எனது மனைவியை எப்படியாவது சிகிச்சைக்கு அழைத்து வரவேண்டும் என்றுதான் எனது மனதில் ஒரே எண்ணமாக ஓடியது. இதைத்தவிர வேறு எதுவும் என் மனதில் தோன்றவில்லை. உடனே மிகுந்த மனஉறுதியோடு என்னிடமிருந்த ஒரே சைக்கிளை நம்பி புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன் என கூறியுள்ளார். இந்த வயதிலும் அறிவழகனின் மன உறுதி மற்றும் மனைவி மீதான அவரது அளவற்ற அன்பை கண்டு டாக்டர்கள் மனம் உருகினர். இதன்பின்னர் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்கள், மஞ்சுளாவை 3 நாட்கள் மருத்துவமனையில் தங்க வைத்து சிறப்பான சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கும்பகோணம் திரும்புவதற்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து 2 ஊழியர்களையும் உதவிக்குஅனுப்பி வைத்ததுடன், அறிவழகனின் சைக்கிளையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தனது வயதையும், உடல்நிலையையும் பொருட்படுத்தாது மனைவியை சிகிச்சைக்காக கும்பகோணத்தில் இருந்து 145 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுச்சேரிக்கு அன்பழகன் சைக்கிளில் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அறிவழகனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஊர் திரும்பி வந்த அறிவழகனுக்கு கிராம மக்கள் ஒன்று கூடி பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story